கருப்பு-சிவப்புப் பானை வகை கருப்பு-சிவப்புப் பானைகள் பெருங்கற்கால/இரும்புக்கால மக்களால் பயன்படுத்தப் பட்டன. இப்பானை வகையின் உட்புறம் கருப்பாகவும், வெளிப்புறம் சிவப்பாகவும் காணப்படும்.
ஆனால் சில பானைகளில் வெளிப்பகுதியில் வாய்/விளிம்புப்பகுதியில் 3 முதல் 4 செ.மீ வரை கருப்பாகக் காணப்படும். இவை பெருங்கற்கால ஈமச்சின்னங்களிலும், வாழ்விடங்களிலும் காணப்படுகின்றன. இது வழவழப்புடன், நல்ல சிவப்பு நிறத்தில் பார்ப்பதற்கு அழகாகத் தோற்றமளிக்கும். சிறப்பு இப்பானை வகைகள் தமிழகத்தில், இரும்புக்காலம்/பெருங்கற்காலம்/சங்ககாலம் ஆகிய காலங்களைச் சேர்ந்த தொல்லியல் இடங்களை அடையாளப்படுத்த உதவுகின்றன. இப்பானை வகை, இந்தியாவின் பிற பகுதிகளிலும் காணப்படுகின்றது. காலம் இப்பானை வகைகள் தமிழகத்தில் பொ.ஆ.மு. 1000லிருந்து பொ.ஆ. 500 வரை பயன்படுத்தப்பட்டன. ஆனால் தமிழகத்திற்கு வெளியே, இராசஸ்தானில் இது செப்புக்காலப் பண்பாடுகளிலும், குசராத்தில் அரப்பா பண்பாட்டிலும் பொ.ஆ.மு 2500லிருந்து காணப்படுகின்றது.
செய்யும் முறை பொதுவாகச் சிவப்பாக உள்ள பானைகளை விட, இது வேறுபட்டு இருப்பதால், இதன் செய்முறை குறித்து அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. இவை “தலை கீழாகப் பானைகளை அடுக்கும் முறையைப்” (Inverted Firing Technique) பயன்படுத்தி சூளைகளில் சுடப்பட்டதாகக் கருதப்படுகின்றது. வகைகள் கருப்பு-சிவப்புப்
பானைகளில் மூன்று வகைகள் காணப்படுகின்றன. அவையாவன. வடிவங்கள்
பானைகள், கிண்ணங்கள், சாடிகள், தாழிகள் ஆகிய பானை வடிவங்கள் கருப்பு-சிவப்புப் பானை வகையில் காணப்படுகின்றன. காணப்படும் இடங்கள் தமிழகத்தில் மற்றும் தென்னகமெங்கும் உள்ள பெருங்கற்கால ஈமச்சின்னங்களில் இவை பரவலாகக் காணப்படுகின்றன. ஈமச்சின்னங்களில் இறந்தவர்களின் உடல் எலும்புகளுடன் இப்பானை வகைகள் வைக்கப்பட்டன. இப் பானைகளில் இறந்தவர்களுக்காக உணவுப் பொருட்களை அக்கால மக்கள் வைத்திருக்கலாம். மனித எலும்புகளும் சில கிண்ணங்களில் வைக்கப்பட்டன.
தமிழகத்தில் கொடுமணல்,
சித்தன்னவாசல், சானூர், ஆதிச்சநல்லூர், மயிலாடும்பாறை உட்பட ஆயிரக்கணக்கான
இடங்களில் இவை காணப்படுகின்றன.
மேற்கோள் நூல் Leshnik,L.S 1974, South Indian Megalithic Burials, The Pandukal Complex. Wesbaden. |